ஜனதா தளம்(எஸ்) அசைக்க முடியாத நிலையில் உள்ளது


ஜனதா தளம்(எஸ்) அசைக்க முடியாத நிலையில் உள்ளது
x

கட்சிக்காக உயிரையும் கொடுக்கும் தொண்டர்கள் இருப்பதால்தான் ஜனதா தளம்(எஸ்) கட்சி அசைக்க முடியாத நிலையில் உள்ளது என்று குமாரசாமி கூறினார்.

ஹாசன்,

பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பிரமாண்ட பேரணியும், பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் 126 பேர் அறிவிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பெங்களூருவுக்கு வந்திருந்தனர். இதில் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் பகுதியைச் சேர்ந்த சீனிவாஸ்(வயது 40) என்பவரும் ஒருவர்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தீவிர தொண்டரான இவர் பொதுக்கூட்டம் முடிந்தபின்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்து புறப்பட்டார். ஆனால் அவர் வேனுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது நண்பர்கள், கூட்டம் நடந்த பகுதியில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சீனிவாஸ் ஒலேநரசிப்புராவிற்கு சென்றிருப்பார் என நினைத்து, அவருடைய நண்பர்கள் அங்கிருந்து வேனில் புறப்பட்டு ஒலேநரசிப்புராவிற்கு வந்துவிட்டனர்.

இங்கு வந்து பார்த்தபின்புதான் அவர் வீடு திரும்பாதது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த சீனிவாசின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசில் புகார் செய்து, சீனிவாசை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசை தேடினர்.

இதற்கிடையே பொதுக்கூட்டம் நடந்து முடிந்த இடத்தை மறுநாள் மாலையில், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பார்வையிட்டார். அப்போது அங்கு ஒரு தொண்டர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து விசாரிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தது கட்சியின் தீவிர தொண்டரான ஒலேநரசிப்புராவைச் சேர்ந்த சீனிவாஸ் என்பதும், உடல்நிலையை பொருட்படுத்தாமல் கூட்டத்தில் வந்து கலந்து கொண்ட அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து அனாதையாக கிடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சீனிவாசின் உடல், ஒலேநரசிப்புராவிற்கு கொண்டு செல்லப்பட்டு அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் குமாரசாமி, ஒலேநரசிப்புராவிற்கு சென்று சீனிவாசின் குடும்பத்தினரை சந்தித்தார். பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனிவாஸ் போன்று உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கட்சிக்காக உயிரையும் கொடுக்க இருக்கிற தீவிர தொண்டர்களால்தான் இன்று ஜனதா தளம்(எஸ்) கட்சி, 2 தேசிய கட்சிகளுக்கு போட்டியாக கர்நாடகத்தில் அசைக்க முடியாத ஆணி வேராக வளர்ந்து வருகிறது. அசைக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால் இனிமேல் தொண்டர்கள் யாரும் இப்படி இருக்க வேண்டாம். முதலில் உங்களுடைய உடல் நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் நன்றாக இருந்தால்தான் கட்சி நன்றாக வளரும். வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக தொலைநோக்கு திட்டங்களை நாங்கள் செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story