எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்றக் கூடாது: திருவண்ணாமலையில் அ.தி.மு.க.வினர் 2 பேர் தீக்குளிக்க முயற்சி


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்றக் கூடாது: திருவண்ணாமலையில் அ.தி.மு.க.வினர் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 24 Feb 2018 5:13 AM IST (Updated: 24 Feb 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்றக் கூடாது என அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்றக் கூடாது என்று மாவட்ட செயலாளர் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணாபுரம் அருகே 3 கிராமங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

இதையடுத்து நேற்று காலை சுமார் 10 மணியளவில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள வடவீதி சுப்பிரமணியர் சாமி கோவில் எதிரே நிறுவப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலைகள் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சிலைகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூலம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சிலைகளை வைத்ததற்கு அனுமதி பெறவில்லை என்று காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் சிலைகளை திறக்க விடவில்லை. அதைத்தொடர்ந்து இந்த சிலைகள் தார் பாயால் சுற்றப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் அந்த சிலைகளை திறப்பதற்கான வேலைகளை அ.தி.மு.க.வினர் செய்தனர். அப்போது அங்கு வந்த போலீசார், அ.தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி பணிகளை முடக்கினர். அன்று முதல் தற்போது வரை அந்த சிலைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்படும் வேளையில், சிலைகளை திறக்க விடாமல் அகற்றும் நடவடிக்கையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருவதால் அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வடவீதி சுப்பிரமணிய சாமி கோவில் எதிரே உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் முன்பு நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமையிலும் நகர செயலாளர் செல்வம் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன், சித்த வைத்தியர் பழனி, கீழ்பென்னாத்தூர் தொகுதி முன்னாள் இணைசெயலாளர் ராமச்சந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வினர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் அ.தி.மு.க. வினர் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்றக் கூடாது என்றும், போலீசார் தி.மு.க. வினர் கைக்கூலியாக செயல்படுகின்றனர் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து அ.தி.மு.க. வினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த ஷீலா என்பவர் திடீரென கையில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து அவரது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சுமார் 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் வந்து, மாவட்ட செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது, சிலைகளை அகற்றுவதற்காக போலீசார் குவிக்கப்படவில்லை. பாதுகாப்புக்காகவே போலீசார் இங்கு உள்ளனர் என்று கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர், திருவண்ணாமலையில் 3 இடங்களில் அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளை அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து போலீசார் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அகற்றப்பட்ட சிலைகள் அங்கு வைக்கும்வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை சின்னகல்லாப்பாடியை சேர்ந்த மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார். அவரிடம் இருந்தும் போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். அதனால் மீண்டும் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. வினர் அங்கு பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Next Story