மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இருவேறு சம்பவங்களால் ரெயில் சேவை பாதிப்பு


மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இருவேறு சம்பவங்களால் ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2018 5:32 AM IST (Updated: 24 Feb 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இருவேறு சம்பவங்களால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே ஸ்லோ வழித்தடத்தில் நேற்று காலை 11.15 மணியளவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து தானே நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் நடுவழியில் நின்றது. அந்த ரெயிலின் பின்னால் வந்து கொண்டிருந்த மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. சில சேவைகள் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கோளாறை சிறிது நேரத்தில் சரி செய்தனர். முன்னதாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவதி அடைந்த பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தின் காரணமாக ஸ்லோ மற்றும் விரைவு வழித்தடத்தின் இரு மார்க்கங்களிலும் ரெயில்கள் சுமார் 20 நிமிடங்கள் விரையிலும் தாமதமாக இயங்கின.

இந்தநிலையில், பிற்பகல் 2 மணியளவில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாட்னா செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் கசாரா ரெயில் நிலையம் அருகே என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நின்றது. வெகுநேரமாகியும் அந்த ரெயில் என்ஜின் சரி செய்யப்படவில்லை. இதன் காரணமாக அந்த ரெயிலில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் மும்பையில் இருந்து கசாரா நோக்கி சென்ற மின்சார ரெயில் அசன்காவ் ரெயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டன. 

Next Story