‘நாசா’வுக்கு கடிதம் எழுதிய சிறுமி!


‘நாசா’வுக்கு கடிதம் எழுதிய சிறுமி!
x
தினத்தந்தி 24 Feb 2018 1:30 PM IST (Updated: 24 Feb 2018 1:30 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’வுக்கு கடிதம் எழுதியதன் மூலம் புகழ்பெற்றிருக்கிறார், ஒரு 6 வயதுச் சிறுமி.

யர்லாந்தைச் சேர்ந்த சிறுமி, புளூட்டோவை மீண்டும் கிரகமாக அறிவிக்க வேண்டும் எனத் தனது கடிதத்தில் கோரியிருக்கிறார்.

நமது சூரியக் குடும்பத்தில் 9-வது கிரகமாக, கடந்த 1930-ம் ஆண்டு புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2006-ம் ஆண்டு, புளூட்டோ ஒரு கிரகம் அல்ல, அது ஒரு குறுங்கோள் என்று விஞ்ஞானிகள் அதிரடியாக அறிவித்துவிட்டனர்.

ஏனெனில், 8-வது கிரகமாக உலா வரும் நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதையில் புளூட்டோ குறுக்கிடுவதால், பூமியின் நிலவான சந்திரனை விடச் சிறியதான புளூட்டோ, கிரக அந்தஸ்தை இழந்தது.

ஆனால் விஞ்ஞானிகளின் அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் புளூட்டோவுக்கு மீண்டும் கிரக அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனர்.

அவர்கள் வரிசையில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமியான காரா லூசி ஓ கான்னர், அதே கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாசாவுக்கு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், ‘நான் கேட்ட ஒரு பாடலின் முடிவில், புளூட்டோவை மீண்டும் சூரியக் குடும்பத்தில் இணைக்க வேண்டும் என்று இருந்தது, அது நிறைவேற ஆசைப்படுகிறேன். மற்ற கோள்களைப் போல புளூட்டோவும் முக்கிய கோளாக இருக்க வேண்டும். ஏனென்றால், நான் பார்த்த ஒரு வீடியோவில், கடைசிக் கோளாக இருக்கும் புளூட்டோவை நாம் சென்று பார்ப்போம் என்று சொல்லப்பட்டது. மற்றொரு வீடியோவில், பூமியால் புளூட்டோ குப்பையில் போடப்பட்டது என இருந்தது. எந்த ஒரு கிரகத்தையும் குப்பையில் போடக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

தனது ஆசிரியையின் உதவியுடன் சிறுமி லூசி அக்கடிதத்தை எழுதியிருந்தார். சிறுமியின் கடிதத்தை கண்டு வியந்த, நாசாவின் கிரகங்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கிரீன், தற்போது சிறுமிக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், ‘நான் உனது கருத்துடன் ஒத்துப்போகிறேன், உண்மையில் புளூட்டோ ஒரு குளிர்ச்சியான கிரகம்தான். புளூட்டோவுக்கு இதயம் இருக்கக்கூடும் என்பது சிலரின் நம்பிக்கை. இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கும். என்னைப் பொறுத்தவரை, புளூட்டோ ஒரு சிறிய கிரகமா, இல்லையா என்பது முக்கியமல்ல, புளூட்டோ ஒரு வசீகரமான இடம், அதுபற்றி நாம் தொடர்ந்து ஆராய்ச்சிசெய்ய வேண்டும்.

நீ பெரியவளாகி, ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடிப்பாய் என நம்புகிறேன். நீ நன்றாகப் படித்து, பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், நாசாவில் உன்னைச் சந்திப்பதற்கு நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நாசாவில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியாளராகி, புளூட்டோ உள்ளிட்ட அனைத்து முக்கியக் கிரகங்களுக்கும் சென்றுவர வேண்டும் என்பதே லூசியின் ஆசை.

லூசியின் விண்வெளிக் கனவுகள் தொடர்ந்து விரியட்டும்! 

Next Story