எண்ணிக்கை அதிகரித்ததால் அழிந்தனவா டைனோசர்கள்?
உலகப் பரப்பில் உலவித் திரிந்த உயிரினங்களான டைனோசர்கள், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவே அழிந்திருக்கக்கூடும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
பூமியைத் தாக்கிய பெரும் விண்கல்லால் டைனோசர்களை அழித்திருக்கக்கூடும் என்று ஒரு கருத்து கூறப்பட்டு வந்தது.
ஆனால், விண்கல் தாக்கிய சம்பவத்துக்கு முன்பே டைனோசர்களின் சரிவு தொடங்கியிருந்தது என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டைனோசர்கள், பூமி முழுக்க ஆக்கிரமித்திருந்ததே அவற்றின் அழிவுக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தென்அமெரிக்காவில் தோன்றிய டைனோசர்கள், பூமி முழுவதும் நிரப்பிவிடும் வகையில் விரைவாகவும், வேகமாகவும் பரவின.
கொடூரமான டி ரெக்ஸ் முதல், மிகவும் பிரமாண்டமான, நீண்ட கழுத்துடைய டிப்லோடோகஸ் வரை நூற்றுக்கணக்கான வித்தியாசமான டைனோசர்கள் பூமியில் தோன்றின.
பூமியெங்கும் ராஜ்ஜியம் நடத்திய அவை, விண்கல் விழுந்து தாக்கி அழிப்பதற்கு முன்பே, பூமியில் இடமில்லாமல் போய்விட்டதால் அழியத் தொடங்கியிருக்கின்றன.
‘இயற்கைச் சூழலியல் மற்றும் பரிணாமம்’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ள இது தொடர்பான ஆய்வு, தென்அமெரிக்காவில் இருந்து வெளியேறிய டைனோசர்களின் வழியை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.
“டைனோசர்கள் மிகவும் விரைவாகப் பரவி பூமியின் எல்லாப் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தன” என்று இந்த ஆய்வின் இணை ஆய்வாளரான ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சோந்த டாக்டர் கிறிஸ் வென்டிட்ரி கூறுகிறார்.
டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்னால் பூமியில் ஏற்பட்ட ‘மாபெரும் இறப்பு’ எனப்படும் ‘முழு அழிவு’ விட்டுச் சென்றிருந்த வெற்றிடத்தை, டைனோசர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனவாம்.
பேரழிவுக்கு உட்பட்டிருந்த பூமி முழுவதும், பரவலாகுவதற்கு இருந்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி டைனோசர்கள் பரவின. பிற விலங்குகளிடம் இருந்து உணவு, இடம் என்ற எந்தப் போட்டியும் இல்லாமல் டைனோசர்களால் பரவ முடிந்தது.
ஆனால், அந்த இனத்தின் இறுதிக் காலத்தில், அவை எல்லா இடங்களுக்கும் தங்களை தகவமைத்துக்கொண்ட பின்னர், அந்த முன்னேற்றம் மெதுவானது.
பறவை டைனோசர்கள் மட்டுமே உயிர் தப்பி, இப்போதைய பறவைகளாக உருவாகியுள்ளன.
“டைனோசர்கள் ஒரு கட்டத்தில் பூமியை நிறைத்திருந்தன. நகருவதற்குக்கூட இடம் இருக்கவில்லை. அவை தாங்கள் இருந்த இடங்களில் வாழ்வதற்கு சிறப்பியல்புகளைப் பெற்றிருந்தன. எனவே, அவற்றால் வேகமாக இனப்பெருக்கம் செய்ய முடிந்தது” என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சியரா ஓடோநோவன் கூறுகிறார்.
பறவைகள் தவிர பிற அனைத்து டைனோசர் இனங்களுக்கும் அது இறப்பின் கடைசிப் புள்ளியாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.
ஒவ்வொரு டைனோசரும், அதன் மூதாதையரும் உலகில் எங்கு வாழ்ந்தன என்பதை முன்று கோணங்களில் வழங்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒழுங்கற்ற, முழுமையற்ற புதைபடிவச் சான்றுகளை மட்டுமே ஆய்வு செய்வதைவிட முழுமையான வடிவத்தை இது வழங்குகிறது.
ஆனால், விண்கல் பூமியைத் தாக்குவதற்கு முன்பே டைனோசர்கள் வீழ்ச்சியைக் கண்டிருந்தன என்ற கருத்தை எல்லா ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
“கண்டங்கள் சிறிய தொகுதிகளாகப் பிரிந்தபோது, ‘கிரிடோஸ்’ எனப்படும் 135 மில்லியன் ஆண்டுகள் முதல் 63 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை டைனோசர்கள் தொடர்ச்சியாக வேறுபட்டு பரிணாம வளர்ச்சி கண்டன” என்கிறார், மேற்கண்ட ஆய்வில் தொடர்பில்லாத போட்ஸ்மவுத் பல்கலைக் கழகப் பேராசிரியர் டேவிட் மார்டில்.
ஆக, டைனோசர்கள் அழிவு குறித்து ஆய்வாளர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதே இன்றைய நிலை.
Related Tags :
Next Story