கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு


கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Feb 2018 4:45 AM IST (Updated: 25 Feb 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை மடக்கிப்பிடித்து காப்பாற்றினார்கள்.

கோவை,

பெங்களூருவை சேர்ந்தவர் ஜோசப் மைக்கேல்(வயது50). இவர், கோவை பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். திருப்பூரில் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

தனக்கு சொந்தமான 25 சென்ட் நிலத்தை, ரவுடிகளை வைத்து சிலர் பறிக்க முயற்சிப்பதாகவும், தன்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுவதாகவும் கூறி பல முறை பொள்ளாச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் தன்னுடைய 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஈரோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே ஓடிவந்த ஜோசப் மைக்கேல், அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறினார். மின்கம்பத்தில் அவர் ஏறியவுடன், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார். கம்பத்தில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஜோசப் மைக்கேல் நேற்று காலை வந்தார். குழந்தைகளை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினார். போலீசார் விரைந்து வந்து, அவரை சமாதானம் செய்ய முயன்றனர். அவருடைய 2 குழந்தைகளை வைத்து அவரிடம் பேசச்செய்தும் சமாதானம் அடையவில்லை. ‘கலெக்டரை சந்திக்க வேண்டும் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கூறி கழுத்தை அறுக்க முற்பட்டபோது, கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணி புரியும் ஜீவா என்பவர் சாதுர்யமாக செயல்பட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட ஜோசப் மைக்கேலை, பத்திரிக்கையாளர்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் தடுத்தார். பின்னர் போலீசார் நைசாக அவருடைய கையில் இருந்த கத்தியை பறிக்க முயன்றனர். இருந்தாலும் அவர் விடாப்பிடியாக இருந்தார். அப்போது அவரது உடலில் கத்தி பட்டதால் ரத்தம் வடிந்தது. இந்த சந்தர்ப்பத்தில் போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி காப்பாற்றினர்.

இதனால் சுமார் 1 மணி நேரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார், ஜோசப் மைக்கேல் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் உள்ளார். அவருக்கு சொந்தமாக நிலம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தனது மனம்போன போக்கில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்கிறார். எனவே குழந்தைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர். ஜோசப் மைக்கேல் சிகிச்சைக்கு பின்னர், ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story