ஊட்டி-குன்னூர் சாலையில் வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை பூனை சாவு


ஊட்டி-குன்னூர் சாலையில் வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை பூனை சாவு
x
தினத்தந்தி 25 Feb 2018 3:15 AM IST (Updated: 25 Feb 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி-குன்னூர் சாலையில் வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை பூனை ஒன்று இறந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் அதிகமான வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இங்கு வடக்கு வனக்கோட்டம், தெற்கு வனக்கோட்டம், முக்குருத்தி வனச்சரணாலயம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனக்கோட்டம் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் கடமான், சிறுத்தைப்புலி, காட்டெருமை, யானை, புள்ளிமான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் மலபார் அணில், பறக்கும் அணில், தேவாங்கு, சிறுத்தை பூனை உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்களும் காணப்படுகின்றன.

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொட்டபெட்டா மலைச்சரிவில் வேலிவியூ மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து சிறுத்தை பூனை ஒன்று நேற்று ஊட்டி-குன்னூர் சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு வாகனத்தில் அடிபட்டு சிறுத்தை பூனை இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு வனக்கோட்ட வனச்சரகர் முத்துகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த சிறுத்தை பூனையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த சிறுத்தை பூனை அரிய வகை விலங்கினம் என்பதற்கான வனத்துறை பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இதனை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் இருந்த சிறுத்தை பூனையை வேறு வனவிலங்குகள் துரத்தியதாலோ அல்லது உணவு தேடியோ சாலைக்கு வந்திருக்கலாம். அவ்வாறு வந்த போது வாகனத்தில் மோதி தலையில் அடிபட்டு சிறுத்தை பூனை இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து நீலகிரி வடக்கு வனக்கோட்ட உதவி வனபாதுகாவலர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலைப்பாதையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் சாலையை வனவிலங்குகள் கடக்கிறதா? என்பதை கவனித்து கடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். 

Next Story