சேலம் மத்திய சிறையில் இருந்து 84 கைதிகள் இன்று விடுதலை


சேலம் மத்திய சிறையில் இருந்து 84 கைதிகள் இன்று விடுதலை
x
தினத்தந்தி 25 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து 84 கைதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்படுகின்றனர்.

சேலம்,

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கடந்த வாரம் சேலம் மத்திய சிறையில் டி.ஐ.ஜி. அறிவுடைநம்பி ஆய்வு செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் மீதான குற்றங்கள், அவர்களின் செயல்பாடு மற்றும் நடவடிக்கைகள், நன்னடத்தை குறித்து சிறைத்துறை சூப்பிரண்டு ஆண்டாளிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து கைதிகளின் நடவடிக்கைகளை தனித்தனியாக அதிகாரிகள் ஆராய்ந்து விடுதலை செய்யப்படும் 84 கைதிகளின் பெயர் பட்டியல் தயாரித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தநிலையில், நேற்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டியும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சேலம் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தண்டனை கைதிகள் 74 பேரையும், உடல் நலம் குறைபாடு உள்ள கைதிகள் 10 பேரையும் விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறையில் இருந்து 84 கைதிகள் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளின் விவரம் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விடுதலையாகும் தண்டனை கைதிகள் அனைவரும் வெளியில் சென்றபிறகு குற்றச்சம்பவம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும், அதுபோன்ற செயலில் ஈடுபட்டால் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Next Story