குடிமங்கலம் பகுதியில் குட்டைகள், தடுப்பணைகள் வறண்டன


குடிமங்கலம் பகுதியில் குட்டைகள், தடுப்பணைகள் வறண்டன
x
தினத்தந்தி 25 Feb 2018 1:23 AM IST (Updated: 25 Feb 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் உள்ள குட்டைகள், தடுப்பணைகள் வறண்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தென்னை மரங்கள் அனைத்தும் கருகின.

குடிமங்கலம்,

குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்களுக்கு மின்மோட்டார் மூலம் நேரடியாக தண்ணீர் பாய்ச்சி வந்த விவசாயிகள் நீர்மட்டம் குறைந்ததை தொடர்ந்து சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்ச தொடங்கினர். கடந்த பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது.

இதனால் தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தென்னை மரங்கள் கருகத்தொடங்கின. சுமார் 30 சதவீத தென்னை மரங்கள் கருகி விட்டன. இதனால் விவசாயிகள் தென்னை மரங்களுக்கு மூடாக்கு போட்டும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்தி வந்தனர். இதனால் மோதிய பலன் கிடைக்கவில்லை. தென்னை மரங்களில் காய்ப்புத்திறன் முற்றிலும் சரிந்து காணப்படுகிறது.

ஆண்டுக்கு சராசரியாக 250 தேங்காய்கள் வரை காய்த்து வந்த நிலையில் தற்போது காய்ப்புத்திறன் முற்றிலும் குறைந்து உள்ளது. மேலும் ஏராளமான தென்னை மரங்கள் கருகி விட்டன.

மேலும் கடந்த காலங்களில் பி.ஏ.பி. தண்ணீரை குளங்களில் நிரப்பி வந்தார். குடிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் 30-க்கும் மேற்பட்ட குட்டைகளும் உள்ள நிலையில் தற்போது அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த காலங்களில் 250 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஒரு பகுதிகளில் 1000 அடிக்கும் அதிகமாக ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் இல்லை. கிடைக்கும் தண்ணீரும் கூட சப்பை தண்ணீராக மாறி விட்டது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் இல்லை.

கடந்த காலங்களில் தண்ணீர் இருந்தபோது குளம், குட்டைகளை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது. அதனால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. கிணற்றுப்பாசனம் மூலம் விவசாயம் அதிகளவு நடைபெற்று வந்தது. தற்போதைய நிலைமையில் கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

Next Story