சொத்து தகராறில் தொழிலாளி கழுத்தை இறுக்கி கொலை


சொத்து தகராறில் தொழிலாளி கழுத்தை இறுக்கி கொலை
x
தினத்தந்தி 25 Feb 2018 2:25 AM IST (Updated: 25 Feb 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே சொத்து தகராறில் தொழிலாளியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த சித்தப்பா மகனை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே மாளிகைகோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் முருகன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

பெற்றோரை இழந்த முருகனை சிறுவயது முதல் அவரது சித்தப்பா சுப்பிரமணியன் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன் தன் சொத்தில் இருந்து 1½ சென்ட் இடத்தை வளர்ப்பு மகனான முருகனுக்கு கொடுத்தார். இதனால் சுப்பிரமணியனின் மகன் கண்ணனுக்கும், முருகனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. சுப்பிரமணியனின் இடத்தை கேட்டு அவ்வப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாளிகைகோட்டம் அரசு டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையோரம் நேற்று முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெண்ணாடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முருகனும், கண்ணனும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது, சொத்து பிரச்சினை சம்பந்தமாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது முற்றி டாஸ்மாக் கடை அருகே இருவரும் ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த கண்ணன், முருகனின் வேட்டியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து முருகனின் மனைவி சாந்தி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கண்ணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story