வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:15 AM IST (Updated: 25 Feb 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களில் மாசி பெருந்திருவிழா கடந்த 16-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் நடைபெற்றது.

முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியகாண்டியம்மனை தேருக்கு எடுத்து வந்தனர். தேரில் எழுந்தருளியதும் பெரியகாண்டியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் பரம்பரை அர்ச்சகர் வெ.ரெங்கசாமி அய்யர், வீ.பூசாரிபட்டி நான்கு கரை பட்டயதாரர்களும், வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களுமான பெரியபூசாரி முத்து செல்வம், குதிரைப் பூசாரி மாரியப்பன், சின்னப்பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டைப் பூசாரி வீரமலை ஆகியோர் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களுமான ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், சுதாகர் என்ற சிவசுப்ரமணிய ரெங்கராஜா, அசோக் பாண்டி மற்றும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, பட்டியூர் மற்றும் வீ.பூசாரிபட்டி கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முன்னதாக தேருக்கு முன்பு மாயவர் காளை வாகனத்தில் முரசு கொட்டி செல்ல, அதன் பின்னர் கோவில் வாத்தியம் முழங்க தேர் அசைந்தாடி சென்றது. தேரோட்டத்தின்போது, வழிநெடுகிலும் பக்தர்களும், குடிபாட்டுக்காரர்களும் தேரின் மீது நெல் மற்றும் நவதானியங்கள், மலர் மாலைகள் வீசி பெரியகாண்டியம்மனை வழிபட்டனர்.

தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மக்தும், மருதுபாண்டியன் தலைமையில் நல்லாம்பிள்ளை ஊராட்சி செயலாளர் வீரக்குமார், அணியாப்பூர் ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Next Story