100 ஆண்டுகள் பழமையான குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


100 ஆண்டுகள் பழமையான குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

மூவரசம்பட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமை யான குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மூவரசம்பட்டில், அந்த ஊராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு 5 ஏக்கர் நிலப்பரப்பில் குளம் அமைக்கப்பட்டது.

காலப்போக்கில் ஊராட்சி மன்ற அலுவலகம், பள்ளிக் கூடம், அரசு ஆரம்ப சுகாதார மையம் ஏற்படுத்தப்பட்டு 5 ஏக்கரில் இருந்த குளம் 2 ஏக்கராக சுருங்கி விட்டது. பழமையான இந்த குளத்தில் 12 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த குளத்து நீரானது, அதை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலத்தடி நீருக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, இரும்பு கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது குளத்தில் ஈமச்சடங்குகள் செய்யப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீ்ர்பிடிப்பு பகுதியாக இருந்தாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் குளம் மாசு ஏற்படும் வகையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. செடி, கொடிகள், புற்களும் வளர்ந்து இருக்கிறது. குளத்தை சுற்றிலும் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் காற்றில் அந்த குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் பறந்து வந்து குளத்துக்குள் விழுந்து விடுவதால் தண்ணீர் மாசு ஏற்படுகிறது.

குளத்தின் கரைப்பகுதி தாழ்வாக உள்ளதாலும், படிக்கட்டு இல்லாததாலும் பொதுமக்கள் யாரும் குளத்துக்குள் இறங்க முடியாத நிலை உள்ளது. தாழ்வான கரைப்பகுதியால் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல், குளத்தில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.

குளத்தில் உள்ள இரும்பு கதவுகளும், கரைப்பகுதியும் சேதமடைந்து உள்ளன. குளத்தை சுற்றிலும் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் குளத்தின் கரையோரம் அமர்ந்து மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டுச்சென்று விடுகின்றனர்.

எனவே 100 ஆண்டுகள் பழமையான இந்த குளத்தை சீரமைத்து, ஆகாயத்தாமரைகள், செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். அதிகளவில் தண்ணீர் சேமித்து வைக்கும் வகையில் குளத்தின் கரையை உயர்த்தி பலப்படுத்துவதுடன், பொதுமக்கள் குளத்துக்குள் இறங்க வசதியாக படிக்கட்டிகள் அமைக்க வேண்டும். கரையை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து, நடைபாதை அமைத்து கொடுத்து பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

குளத்தை சுற்றிலும் கரையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி, கரையை சுற்றிலும் மரக்கன்றுகள் நடவேண்டும். சமூகவிரோத செயல்கள் நடைபெறாத வகையில் குளத்தின் கரைகளை சுற்றிலும் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story