புதுச்சேரியில் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும்


புதுச்சேரியில் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:22 AM IST (Updated: 25 Feb 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கூறினார்.

புதுச்சேரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு எல்லைப்பிள்ளைச்சாவடியில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமை தாங்கி, சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் முதன்முதலாக ஜெயலலிதாவின் சிலை அமைப்பதற்கு இடம் கொடுத்து உதவிய முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயலலிதா சிலை, இந்த இடத்திற்கு பெருமை சேர்க்கும். புதுச்சேரியில் முதல் முதலாக ஜெயலலிதாவிற்கு சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாநிலத்தில் உள்ள 30 தொகுதியிலும் தலா ஒரு சிலை அமைக்க வேண்டும்.

அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் அனைவரும் சகோதர்களாக உள்ளோம். சகோதரர்களுக்குள் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால் அனைவரும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலை நிருபித்து சிறப்பான ஆட்சி அமைப்போம். அ.தி.மு.க. மேம்பட, வளர்ச்சி பெற அனைவரும் பாடுபடுவோம். புதுவையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. அப்போது புதுவை அரசு சார்பில் பிரதான சாலையில் ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர்கள் காசிலிங்கம், வெங்கடசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெரியசாமி, நடராஜன், மாநில நிர்வாகிகள் பேராசிரியர் ராமதாஸ், கோவிந்தம்மாள், விஜயலட்சுமி, செல்வராஜ், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின்போது லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கதிர்காமம், பிள்ளைத்தோட்டம், புதுவையின் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் தலைமை தாங்கினார். இதில் வில்லியனூர் மற்றும் மங்கலம் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது அன்னதானம் மற்றும் ஏழை மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

டி.டி.வி. தினகரன் அணி சார்பில் புதுச்சேரி பஞ்சாலை அருகில் வக்கீல் வேல்முருகன் தலைமையில் ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஏழை மக்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் மூர்த்தி, பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story