ஒகி புயலில் சிக்கி மாயமான 139 மீனவர்கள் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரண நிதி பெற்றுத்தர நடவடிக்கை


ஒகி புயலில் சிக்கி மாயமான 139 மீனவர்கள் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரண நிதி பெற்றுத்தர நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் சிக்கி மாயமான 139 மீனவர்கள் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரண நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் வீசிய போது இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், ஏழுதேசம், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய மீனவ கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இந்த கிராமங்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்றார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பங்கு தந்தைகள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடனும் அவர் பேசினார். அதன்பிறகு அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியபோது கூறியதாவது:–

ஒகி புயலில் சிக்கி கடலில் காணாமல் போன குமரி மாவட்ட மீனவர்கள் 139 பேரின் குடும்பத்தினருக்கு அரசிடம் இருந்து விரைவில் நிவாரண நிதி பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். மேலும், காணாமல் போன மற்றும் இறந்த மீனவர்களின் வாரிசுகளுக்கு உரிய வேலை வாய்ப்பு செய்து தரப்படும். சேதம் அடைந்த படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரண நிதி அரசிடம் இருந்து பெற்றுத்தரப்படும். கடலரிப்பை தடுப்பதற்காக கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள், பராமரிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பத்மனாபபுரம் சப்–கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மீன் வளத்துறை துணை இயக்குனர் லேமக் ஜெயகுமார், மீன் வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story