மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் -தினகரன் ஆதரவாளர்கள் மோதல்


மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் -தினகரன் ஆதரவாளர்கள் மோதல்
x
தினத்தந்தி 26 Feb 2018 5:15 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

அவனியாபுரம்,

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் குலதெய்வ கோவில் உள்ளது. அங்கு அவரது பேரனுக்கு நேற்று மொட்டை போட்டு காதணி விழா நடத்தப்பட்டது. இதில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். வழிபாட்டை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக நேற்று நண்பகல் 12 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்த னர்.

இதேபோல டி.டி.வி. தினகரன் குமரி மாவட்டத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்களும் அங்கு கூட்டமாக நின்று அவருக்காக காத்திருந்தனர்.

பகல் 12.10 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தின் நுழைவு வாசலுக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ். ஒழிக, என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் டி.டி.வி.தினகரன், சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, சிறிது நேரத்தில் டி.டி.வி.தினகரன் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், அவருக்கு எதிராக கோஷம் போட்டு, காலணிகளை வீசினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி செருப்புகளை வீசினர். இதனால் விமான நிலையம் போர்க் களமாக மாறியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.

இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வமும், தினகரனும் வெவ்வேறு விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோல், மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story