ஜூன் மாதத்துக்குப்பின் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்காது - பிரதமர் நரேந்திரமோடி பேச்சு


ஜூன் மாதத்துக்குப்பின் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்காது - பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
x
தினத்தந்தி 26 Feb 2018 5:00 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

வருகிற ஜூன் மாதத்துக்குப்பின் புதுச்சேரியை தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்காது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை மைதானத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திரமோடி நேற்று மதியம் 2.10 மணிக்கு வந்தார். அவருக்கு பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தனர். மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி தனது பேச்சை தமிழில் தொடங்கினார். அப்போது அவர், புதுச்சேரி சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். உங்களை பார்க்க புதுச்சேரி வந்ததில் சந்தோஷம். புதுச்சேரி அழகான ஊர் என்று தமிழில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் இந்தியில் பேசினார். அவரது பேச்சை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் கடுமையான வெயிலில் காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். புதுச்சேரி சித்தர்கள் வாழ்ந்த பூமி. அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்தபோது இங்குள்ள மக்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்கள். அதேபோல் பாரதியார் வந்தபோதும் இதயப்பூர்வமாக வரவேற்றனர். வாஞ்சிநாதனையும் வரவேற்று சுதந்திரபோராட்டத்தில் புதுச்சேரி பங்கேற்று உள்ளது. இங்குள்ள ஆட்சி நல்ல முறையில் நடக்கிறதா? நண்பர்களே, ஆட்சியாளர்கள் இந்த மண்ணிற்கு அநியாயம் இழைத்துள்ளனர். ஒருவர் பின் ஒருவராக வந்த ஆட்சியாளர்கள் மக்கள் சக்தியை உணர தவறி விட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளில் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தடைபோடப்பட்டுள்ளது. பல நாடுகள் நம்மோடு சுதந்திரம் பெற்றன. ஆனால் அவை நம்மைவிட முன்னேறிவிட்டன. இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? நாம் முன்னேறுவதில் என்ன தடை உள்ளது? நமது முதல் பாரத பிரதமர் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அடுத்ததாக அவரது மகள் 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன்பின் அவரது மகன் 5 ஆண்டுகள் ஆண்டார். பின்னர் 10 ஆண்டுகள் அந்த குடும்பத்தின் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடந்தது. அவர்கள் 48 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளனர்.

வருகிற மே மாதம் வந்தால் நமது ஆட்சி வந்து 48 மாதமாகிறது. கடந்த 48 வருடத்திலும், இந்த 48 மாதத்திலும் நாம் என்ன அடைந்தோம் என்று எடைபோட்டு பார்ப்போம். ஒரு காலத்தில் புதுச்சேரி ஜவுளித்துறையில் மின்னியது. ஆனால் இப்போது அந்த மினுமினுப்பு போய்விட்டது. கூட்டுறவு நிறுவனங்கள் முழுமையாக நொடிந்துபோய்விட்டன.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. புதுவை மாநிலம் பின்னடைவை சந்தித்து உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும்.

சட்டமன்றத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயக முறைப்படி பணியாற்ற வேண்டும். இங்கு அவர்களது ஜனநாயக குரல்வளையை நெரிப்பது ஏன்? அதற்கு காரணம் என்ன? புதுச்சேரி முதல்-அமைச்சரான சீமான் நாராயணசாமிக்கு முன்னதாக வாழ்த்து தெரிவிக்க ஆசை. ஜூன் மாதத்துக்குப்பின் இவரைத்தான் காங்கிரஸ் தலைவர்கள் மாதிரியாக காட்டுவார்கள்.

காரணம் என்ன தெரியுமா? நான் சொல்கிறேன். வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வீட்டுக்கு சென்றுவிடும். அடுத்ததாக கர்நாடகாவிலும் வீட்டுக்குப்போய் விடுவார்கள். நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சிபோய்விடும். காங்கிரஸ் முதல்-அமைச்சராக நாராயணசாமி மட்டும்தான் இருப்பார். ஆகவே ஜூன் மாதத்துக்குப்பின் காங்கிரசார் நாராயணசாமியை தோளில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் முதல்-அமைச்சர் என்று காட்டுவார்கள்.

புதுவையை நவீனமயமாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.1,800 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனால் சுற்றுலா, போக்குவரத்து வளர்ச்சி அடைய முடியும். முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 13 லட்சம் மக்கள் வசிக்கும் புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் 3.25 லட்சம் பேருக்கு எந்தவித ஜாமீனுமின்றி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இளைஞர்கள் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுற்றுலா, ஜவுளி, மருத்துவம், கல்வி என எந்த துறையாக இருந்தாலும் அதை பயன்படுத்தி நீங்கள் தொழில் செய்யலாம். மத்திய அரசு உங்களோடு உள்ளது.

125 கோடி மக்களுக்கும் மனஉறுதியோடு சபதமேற்கு முன்னேற்ற பாதையில் செல்கிறோம். நமது கனவு புதிய இந்தியா. இது எப்போது நிறைவேறும். புதிய புதுச்சேரி உருவாகும்போது அது சாத்தியமாகும். அதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. புதிய புதுவையை உருவாக்க நாம் சபதமேற்போம்.

இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story