கேரளாவுக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு: பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை நாளை முற்றுகையிட முடிவு


கேரளாவுக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு: பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை நாளை முற்றுகையிட முடிவு
x
தினத்தந்தி 26 Feb 2018 3:30 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) முற்றுகையிட முடிவு செய்து உள்ளதாக திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்பந்தம் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 5.5 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவிற்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள தண்ணீர் வழங்க மே மாதம் வரை கால அவகாசம் உள்ளது. இதற்கிடையில் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 63 கன அடி தண்ணீர் அண்மையில் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. மேலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி கேரளா ஜனதா தளம் கட்சியினர் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்களை மறித்து கடந்த 22-ந் தேதி இரவு முதல் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தமிழகத்தில் தேங்கின. இதையடுத்து, இரு மாநில போலீசார் பாதுகாப்புடன் சரக்கு வாகனங்கள் கேரளாவிற்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி பாசனத்திற்காக வழங்கப்படும் தண்ணீர் ஆழியாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. அதன்படி கேரளாவுக்கு ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் நேற்று காலை முதல் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.ஏ.பி. விவசாயிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். சிறுவாணியில் இருந்து வனப்பகுதிக்கு தண்ணீரை கேரள அதிகாரிகள் திருப்பி விட்டு உள்ளனர். தற்போது, சிறுவாணி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனில் ஆழியாறு நீரை கேரளாவிற்கு வழங்க வேண்டும் என கேரள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி பரம்பிக்குளம் தண்ணீரை ஆழியாறுக்கு திருப்பி கேரளாவிற்கு இன்று (நேற்று) முதல் வினாடிக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், முதலாம் மண்டலத்தில் இரண்டாவது சுற்றுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியாறுக்கு தண்ணீர் இறக்கி கேரளாவிற்கு வினியோகம் செய்யப்படுவதை அதிகாரிகள் நிறுத்தம் செய்ய வேண்டும்.

இல்லையெனில் பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை நாளை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story