தேவாலாவில் 30 கிலோ கடமான் இறைச்சி பறிமுதல்: தந்தை, மகன் கைது


தேவாலாவில் 30 கிலோ கடமான் இறைச்சி பறிமுதல்: தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 26 Feb 2018 3:45 AM IST (Updated: 25 Feb 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

தேவாலாவில் 30 கிலோ கடமான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தந்தை, மகனை வனத்துறையினர் கைது செய்தனர்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியில் கடமான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனச்சரகர் சரவணன், வன காப்பாளர்கள் லூயிஷ், மில்டன் பிரபு உள்ளிட்ட வனத்துறையினர் வாழவயல் பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரது வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது 30 கிலோ கடமான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கூலிதொழிலாளி புஷ்பராஜ் (வயது 56), அவரது மகன் பேரழகன் (26) ஆகிய 2 பேரை பிடித்து வனத்துறையினர் தேவாலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டேன்டீ ரேஞ்ச் எண்.1 பகுதியில் செந்நாய்கள் தாக்கி கடமான் இறந்து கிடந்ததாகவும், அதனை இறைச்சிக்காக வெட்டி வீட்டுக்கு எடுத்து சென்றதாக பிடிபட்ட புஷ்பராஜ், பேரழகன் ஆகியோர் வனத்துறையிடம் தெரிவித்தனர். பின்னர் கடமான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவாலா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜ், பேரழகன் ஆகியோரை கைது செய்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, செந்நாய்கள் கடித்து கொன்றது பெண் கடமான். அதன் உடலை எடுத்து சென்று துண்டு துண்டாக வெட்டி விட்டதால் அதன் வயது விவரம் தெரிய வில்லை. இதன் இறைச்சியை சமைக்க முயன்ற நேரத்தில் தகவலின் பேரில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டு உள்ளனர், என்றார்.

Next Story