குறைந்த தண்ணீர் தேவையில் வெள்ளரி சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் பெறலாம், கலெக்டர் லதா தகவல்


குறைந்த தண்ணீர் தேவையில் வெள்ளரி சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் பெறலாம், கலெக்டர் லதா தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2018 9:30 PM GMT (Updated: 25 Feb 2018 6:42 PM GMT)

குறைந்த தண்ணீர் தேவையில் வெள்ளரி சாகுபடி செய்து சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

தமிழகத்தில் 2-ம் பசுமை புரட்சியை உருவாக்கும் விதமாக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது உள்ள தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் சொட்டு நீர் பாசனம் முறையில் பயிர் வகை மற்றும் பழங்கள் வகை கன்றுகள் நடவு செய்து பயன்பெறும் விதமாக தோட்டக்கலைத்துறையின் மூலம் 100 சதவீதம் மானியத்தில் பல்வேறு வகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது மாவட்டத்தில் உள்ள தண்ணீர் வசதிக்கேற்ப வெள்ளரியை விவசாயிகள் சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெற முடியும். ஒரு ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி விவசாயம் செய்வதற்கு தோட்டக்கலைத்துறையின் மூலம் மானிய திட்டத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் செட்டு அமைத்துக்கொடுக்கப்படுகிறது. அதன்மூலம் விவசாயிகள் வெள்ளரி செடிகளை சாகுபடி செய்தால் 60 நாட்களில் காய்கள் காய்க்கும். ஒரு டன் காய்(முதல் தரம்) ரூ.32 ஆயிரம் வரை விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வெள்ளரி சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, மாசி ஆகிய மாதங்கள் உகந்த காலமாக இருந்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு விவசாயிகளின் பங்களிப்பு ரூ.35 ஆயிரம் மட்டுமே ஆகும். அதன்மூலம் ஒரு ஏக்கர் வெள்ளரி சாகுபடி முடித்திடும்போது ரூ.1½ லட்சம் வரை விற்பனை செய்யலாம். இதில் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. வெள்ளரியில் தரமான ஊறுகாய் தயாரிக்கும் பணி மேற்கொண்டு வருவதால் சந்தையில் காலதாமதமின்றி அவை விற்பனையாகி வருகின்றன. எனவே விவசாயிகள் மற்ற பயிர் வகைகளை சாகுபடி செய்வதுடன், இதுபோன்ற பணப்பயிர்களை பயிரிட்டு கூடுதல் லாபம் பெற வேண்டும். இதேபோல் மா மற்றும் தென்னை வளர்ப்பு விவசாயிகள் தேனீ வளர்ப்பை ஆர்வமுடன் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறையின் மூலம் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேனீ வளர்ப்பால் மகரந்த சேர்க்கை நடந்து மா மற்றும் தென்னை பயிர்களின் உற்பத்தி திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவும் ஒருவகையில் விவசாயிகளுக்கு லாபம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story