நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்: சிவகாசி அருகே உள்ள அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது


நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்: சிவகாசி அருகே உள்ள அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது
x
தினத்தந்தி 25 Feb 2018 10:30 PM GMT (Updated: 25 Feb 2018 6:47 PM GMT)

திரையுலகில் புகழ்பெற்று விளங்கிய நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அவரது சொந்த ஊரான மீனம்பட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

விருதுநகர்,

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பிடம் பெற்றிருந்த நடிகை ஸ்ரீதேவியின் சொந்த ஊர் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமமாகும். இவரது தந்தை அய்யப்பன். தாயார் ராஜேஸ்வரி. வக்கீலான அய்யப்பன் தொடக்க காலத்தில் சாத்தூர் கோர்ட்டில் வக்கீல் தொழில் மேற்கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டவர். இவரது மூத்த சகோதரர் ராமசாமி சிவகாசி யூனியன் தலைவராக பதவி வகித்தவர். ஸ்ரீதேவி சிறுமியாக இருக்கும் போதே அவரது தந்தை குடும்பத்துடன் சென்னை சி.ஐ.டி.நகரில் குடியேறி விட்டார். அதன் பின்னர் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

ஸ்ரீதேவியின் தங்கை லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி. இவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த ராமசாமியின் மகனாவார். சஞ்சய் ராமசாமி கடந்த 1991-ம் ஆண்டு விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்த சஞ்சய் ராமசாமி சிவகாசி எம்.பி. தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நடிகை ஸ்ரீதேவி, சஞ்சய் ராமசாமிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் அந்த தேர்தலில் சஞ்சய் ராமசாமி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பனின் நண்பர் பாலு நாயக்கர்(வயது81). இவர் சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கூறியதாவது:- ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் சாத்தூரில் வக்கீல் தொழில் செய்யும் போது நான் அவருடன் இருந்தேன். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் காங்கிரசில் இருந்ததால் அவர் காமராஜரை சந்திக்க செல்லும் போதெல்லாம் ஸ்ரீதேவியையும் அழைத்துச் செல்வார்.

சிறுமியாக இருந்த ஸ்ரீதேவியை பார்த்த காமராஜர் ஸ்ரீதேவியை சினிமாவில் அறிமுகப்படுத்தலாமே என அருகில் இருந்த கவிஞர் கண்ணதாசனிடம் தெரிவித்துள்ளார். அவர் ஏற்பாட்டின் பேரில் தான் சின்னப்பதேவர் தயாரித்த துணைவன் படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஸ்ரீதேவி மும்பைக்கு சென்ற பின்பு அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு இல்லை. அவர் இறந்த செய்தி எனக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்ரீதேவியின் சொந்த ஊரான மீனம்பட்டியில் அவரது பூர்வீக வீட்டில் அவரது பெரியப்பா ராமசாமியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஸ்ரீதேவி இறந்த செய்தி கேட்டதும் கிராம மக்கள் முதலில் வதந்தியாக இருக்கலாம் என்றே கருதினர். ஆனால் இறந்த தகவல் உறுதியானஉடன் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story