டெங்கு காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி


டெங்கு காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி
x
தினத்தந்தி 25 Feb 2018 11:15 PM GMT (Updated: 25 Feb 2018 6:51 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலியானது.

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பள்ளிக்கூட மாணவர், கல்லூரி மாணவி உள்பட 5-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் விவரம் வருமாறு:-

பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் காந்தி அண்ணாநகரை சேர்ந்தவர் தீபன் பாக்கியராஜ். அவருடைய மனைவி ஜாஸ்மின் சுவீட்லி. இவர்களுடைய 7 மாத பெண் குழந்தை கரோலின் ஜாய். இந்த குழந்தைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த பின்னரும் காய்ச்சல் குறையவில்லை. உடனே குழந்தையின் ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அந்த குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

உடனே நேற்று முன்தினம் மாலையில் குழந்தை கரோலின் ஜாயை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டெங்கு சிகிச்சை தனிப்பிரிவில் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் குழந்தை கரோலின் ஜாய் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Next Story