காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பழனி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைப்பு, வனச்சரகர் தகவல்


காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பழனி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைப்பு, வனச்சரகர் தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2018 3:00 AM IST (Updated: 26 Feb 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க பழனி வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளதாக பழனி வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்தார்.

பழனி,

பழனி வனப்பகுதி 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு யானை, கடமான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. புலி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பழனி வனப்பகுதி கொடைக்கானல் வனச்சரணாலயத்துடன் இணைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

வனச்சரகர் கணேஷ்ராம் தலைமையில் வனப்பாதுகாவலர்கள் வனப்பகுதியில் இரவு, பகல் நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதையும், வெளிநபர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதையும் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பழனி பகுதியில் மழைப்பொழிவு இல்லை. வெயிலின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து அவற்றின் இலைகள் உதிர்ந்து சருகுகளாக மாறி வருகின்றன. மரங்கள் காய்ந்திருப்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பழனி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து பழனி வனச்சரகர் கணேஷ்ராமிடம் கேட்ட போது, பழனி வனப்பகுதியில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பீட் அமைந்துள்ள பகுதியிலும் தற்போது தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காட்டுத்தீ ஏற்படுவது தடுக்கப்படும் என்றார்.

Next Story