குடிசை வீடு- ராகி தட்டை போர் எரிந்து நாசம்


குடிசை வீடு- ராகி தட்டை போர் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 8:43 PM GMT)

பெருந்துறை, தாளவாடி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடும், ராகி தட்டை போரும் எரிந்து நாசம் ஆனது.

ஈரோடு,

பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள கள்ளியம்புதூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி மாராள். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள். 2 பேரும் கூலித்தொழிலாளர்கள் ஆவர். பழனிசாமி நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் மாராள் அந்த பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் பழனிசாமியின் குடிசை வீடு மதியம் 2.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த சோளத்தட்டு போரிலும் பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் குடிசை மற்றும் சோளத்தட்டு போர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். மேலும் இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து பொதுமக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. வீட்டுக்கு வெளியே இருந்த சோளத்தட்டு போரும் எரிந்து சேதம் ஆனது.

இதேபோல் தாளவாடி பகுதியில் மற்றொரு தீ விபத்து நடந்தது. தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது48). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். மாடுகளின் தீவனத்துக்காக ராகி தட்டைகளை குவித்து வைத்து இருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென ராகி தட்டை போரில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் ராகி தட்டை போர் முற்றிலுமாக எரிந்து நாசம் ஆனது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘தீயணைப்பு நிலையம் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் ஆசனூரில் உள்ளது. இதனால் தாளவாடி பகுதியில் தீ விபத்து பெரிய அளவில் ஏற்பட்டால் அணைப்பது மிகவும் கடினம். எனவே தாளவாடி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story