நடிகர்கள் அரசியலுக்கு வர தகுதி கிடையாது


நடிகர்கள் அரசியலுக்கு வர தகுதி கிடையாது
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 8:58 PM GMT)

நடிகர்கள் அரசியலுக்கு வர தகுதி கிடையாது என்று தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் ஈரோட்டில் கூறினார்.

ஈரோடு,

தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர்கள் பேரறிவாளன், இளவேனில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்துகொண்டு பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியை அழைக்காதது கண்டிக்கத்தக்கது.

ஈரோடு மாநகராட்சியில் ஓடையோரமாக வசிக்கும் பொதுமக்கள், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் காலி செய்து புறநகர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடை புறம்போக்கு ஓரம் வசிப்பவர்களுக்கு மாநகராட்சி பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும்.

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படவில்லை. எனவே அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும். இதேபோல் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கும் மணிமண்டபம் வைத்து முழு உருவ சிலை வைக்க வேண்டும்.

தமிழக அரசு செயல் இழந்த நிலையில் உள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருகிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வர தகுதி கிடையாது. சினிமா மூலமாக புகழ், பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். இத்தனை காலம் சொகுசாக வாழ்ந்துவிட்டு சினிமாவில் நடிக்க முடியாத நேரத்தில் அரசியலுக்கு வருகிறார்கள். எனவே அவர்களிடம் நன்மை செய்யும் நோக்கம் இருக்காது.

Next Story