சேலம் அருகே பரபரப்பு மூடி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை திறப்பு போலீசார் குவிப்பு–பதற்றம்


சேலம் அருகே பரபரப்பு மூடி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை திறப்பு போலீசார் குவிப்பு–பதற்றம்
x
தினத்தந்தி 26 Feb 2018 4:15 AM IST (Updated: 26 Feb 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே மூடி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை நேற்று சிலர் திறந்து வைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்,

சேலம் அருகே வீராணம் ஆச்சாங்குட்டப்பட்டியில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கடந்த 2014–ம் ஆண்டில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை சர்ச்சைக்குரிய இடத்தில் நிறுவப்பட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் அம்பேத்கர் சிலையை திறப்பதற்கு வருவாய்த்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இதையடுத்து சிலை துணிகளை கொண்டு மூடப்பட்டது. அதேசமயம், அம்பேத்கர் சிலையை ஒரு பிரிவினர் திறக்க முயற்சி செய்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக அந்த சிலை மூடியே கிடந்தது.

இந்தநிலையில், மூடி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை நேற்று காலை சிலர் துணிகளை அகற்றி திறந்து வைத்தனர். மேலும், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுபற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் ஏராளமான பொதுமக்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதற்றம், பரபரப்பு நிலவியது.

அதிகாரிகள் விசாரணை


அனுமதியின்றி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்ட தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமசாமி, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், சேலம் டவுன் தாசில்தார் திருமாவளவனும் ஆச்சாங்குட்டப்பட்டி கிராமத்திற்கு வந்து அனுமதியில்லாமல் அம்பேத்கர் சிலையை திறந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.

அப்போது, திறக்கப்பட்ட சிலையை துணிகளால் போலீசார் மூடி வைக்க முயன்றனர். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆச்சாங்குட்டப்பட்டியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பேச்சுவார்த்தை


அனுமதியின்றி யாரும் சிலையை திறக்கக்கூடாது என்றும், இது தொடர்பாக நாளை (இன்று) சேலம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story