உப்பிலியபுரம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயம்


உப்பிலியபுரம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:45 PM GMT (Updated: 25 Feb 2018 9:05 PM GMT)

உப்பிலியபுரம் அருகே த.மங்கப்பட்டிபுதூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே உள்ள த.மங்கப்பட்டிபுதூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 388 ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை அடக்க 192 மாடுபிடி வீரர்கள் வந்தனர். பின்னர் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தனித்தனியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, மீதமுள்ள 186 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டை முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமார் காலை 8.40 மணிக்கு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அனுப்பப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களை கதிகலங்க செய்தும், பந்தாடிவிட்டும் சென்றன. பல காளைகளை வீரர்கள் அடக்கினர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கிரைண்டர், மிக்சி, தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் பண முடிப்புகள் பரிசாக வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக உப்பிலியபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், ஜெயசித்ரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் துறையூர் ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ., மற்றும் முசிறி கால்நடைத்துறை உதவி இயக்குனர் முஸ்தபா உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர். 

Next Story