ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்


ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 45 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Feb 2018 4:15 AM IST (Updated: 26 Feb 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 45 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூச்சொரிதல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களாக வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்தன. தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் கணேஷ் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவ குழுவினரும், மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்த பின்னர் களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். காலை 8 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.

பின்னர் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 816 காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை கொம்பால் குத்தி வீசின.

இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 45 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த 21 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஆடு, குத்து விளக்கு, வெள்ளி நாணயம், பணம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர், புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story