ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால் ஆஜராவேன் திவாகரன் பேட்டி


ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால் ஆஜராவேன் திவாகரன் பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 9:07 PM GMT)

ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால் ஆஜராவேன் என சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார்

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சசிகலாவின் சகோதரர் திவாகரன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதா உருவம் கொண்டதாக இல்லை. காமெடி போன்று நிகழ்ச்சிகளை அவர்கள் செய்து வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வம், அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்து வருகிறார்.

அ.தி.மு.க.வில் இருந்து மற்றொரு எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் வந்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் வருவார்கள். தற்போது தமிழகத்தில் டி.டி.வி.தினகரனை விட்டால் வேறு தலைவர்கள் இல்லை. ஆனால் அவர் தற்போதுள்ள சூழ் நிலையை பயன்படுத்தி முதல்-அமைச்சராக வரமாட்டார். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று தான் முதல்-அமைச்சராக வருவார். எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. எங்கள் குடும்பத்திற்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

நான் டி.டி.வி. தினகரனை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் வந்தால், நான் ஆஜராகி எனக்கு தெரிந்தவற்றை சொல்வேன். காவிரி பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலினை அழைப்பதற்கு இருந்த துணிச்சல், டி.டிவி.தினகரனை அழைப்பதற்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவுடன் சேர்ந்து ஏப்ரல் மாதத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, இது சட்டம் சம்பந்தப்பட்டது, சாத்தியமா என்று தெரியவில்லை என்றார். 

Next Story