ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டித்தள்ளியதில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 12 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டித்தள்ளியதில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 12 பேர் காயம்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 9:07 PM GMT)

கள்ளப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மாடுகள் முட்டித்தள்ளியதில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் அவிழ்த்து விட கொண்டு வரப்பட்டிருந்த 350 காளைகளில், 20 காளைகளுக்கு டாக்டர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால், 330 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றன.

வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் கடம்பூரை சேர்ந்த சுரேஷ் (வயது 27), தொண்டமாந்துறை ராமர் (63), அரசலூர் அசோக் (21), பூலாம்பாடியை சேர்ந்த பாஸ்கர் (21), மணி (19), சேலம் மாவட்டம் கொண்டையம்மல்லியை சேர்ந்த அழகுவேல் (28) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாடிவாசலுக்கு காளைகளை கொண்டு வரும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகத்தை ஒரு காளை திடீரென்று முட்டி தள்ளியது. இதில் ஆறுமுகத்துக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து வந்த காளை துணை போலீஸ் சூப்பிரண்டை முட்டித்தள்ளிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினரால் சில்வர் பாத்திரம், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரும்பாவூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கள்ளப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story