கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி முதல் தொடர் போராட்டம் டாக்டர்கள் முடிவு


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி முதல் தொடர் போராட்டம் டாக்டர்கள் முடிவு
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 9:07 PM GMT)

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி முதல் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் கூறினார்.

திருச்சி,

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் 10-வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் டாக்டர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநில தலைவர் லட்சுமி நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், சம்பள பாக்கியை உடனடியாக வழங்கக் கோரியும் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு இந்த சங்கம் முழு ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று, அரசு டாக்டர்களுக்கு ஊதியம் தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு நடைபெறும் மாநில மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும் ‘நீட்‘ தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களின் இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் மற்றும் பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் மார்ச் 1-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் முதல் வாரம் எங்கள் சங்கத்தை சேர்ந்த அரசு டாக்டர்கள் கோரிக்கைகள் அடங்கிய வாசங்களை கழுத்தில் அட்டையாக அணிந்து பணியில் ஈடுபடுவார்கள். 8-ந்தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் தர்ணா போராட்டமும், 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அற வழிப்போராட்டமும் நடத்தப்படும். மேற்கண்ட போராட்டங்கள் நடத்தியும் எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற இல்லையென்றால் 15-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு லட்சுமி நரசிம்மன் கூறினார்.

முன்னதாக சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் டாக்டர் அருளஸ் வரன் நன்றி கூறினார்.


Next Story