குந்தாப்புரா டவுனில் பழங்கால சாமி சிலைகள் விற்பனை செய்ய முயற்சி


குந்தாப்புரா டவுனில் பழங்கால சாமி சிலைகள் விற்பனை செய்ய முயற்சி
x
தினத்தந்தி 26 Feb 2018 4:38 AM IST (Updated: 26 Feb 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

பல கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால சாமி சிலைகள் பறிமுதல்

மங்களூரு,

குந்தாப்புரா டவுனில் விற்பனை செய்ய முயன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா டவுன் கோட்டேஸ்வர் பகுதியில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோவில் அருகே சிலர் பழங்கால சாமி சிலைகளை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக குந்தாப்புரா டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அங்கு ஒரு காரின் அருகே 5 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை சுதாரித்துக் கொண்ட போலீசார் 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், மேலும் சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனை செய்தனர். காரில் 4 பழங்கால சாமி சிலைகள் வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். இதையடுத்து 4 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்கள் மங்களூரு படில் பகுதியை சேர்ந்த நெவில் மில்கி மஸ்கரேனஸ், சிவமொக்கா மாவட்டம் தாளகொப்பாவை சேர்ந்த அனில், மங்களூரு குலசேகர் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் செக்யூரா, மங்களூரு சர்ச் ரோடு பகுதியை சேர்ந்த ஜான், அனிலா என்பதும், நெவில் மில்கி மஸ்கரேனஸ், அனில், ஆஸ்டன் செக்யூரா ஆகியோர் சேர்ந்து ஜான், அனிலாவிடம் 4 பழங்கால சாமி சிலைகளை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 பழங்கால சாமி சிலைகள், கார், பணம் எண்ணும் எந்திரம், ரூ.40 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story