மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரிய மனு தள்ளுபடி + "||" + A petition requested to extend the deadlines linking Aadhar number with ration cards

ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரிய மனு தள்ளுபடி

ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரிய மனு தள்ளுபடி
ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மும்பை,

மராட்டிய அரசு ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் ரேஷன் கார்டுகளுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மராட்டிய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாசிக்கை சேர்ந்த ஆசிஸ் பதான் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், “தற்போது உள்ள ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் தொடர்ந்து கால தாமதம் ஏற்படுகிறது.


அதுமட்டும் அல்லாமல் எனக்கு மராட்டிய அரசு வழங்கிய ரேஷன் கார்டிலும், ஆதார் கார்டிலும் பல்வேறு தவறுகள் உள்ளன. குறிப்பாக பெயர், முகவரி, புகைப்படம் போன்றவை தவறாக அச்சிடப்பட்டுள்ளன.

இந்த தவறுகளை சரிசெய்து, ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க தற்போது தரப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதாக இல்லை. எனவே அதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சாந்தனு கும்கர் மற்றும் ராஜேஷ் கட்கரே அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிநபரான ஆசிஸ் பதானின் கார்டுகளில் உள்ள தவறுக்காக இந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து முறையிட்டு தவறுகளை சரிசெய்துகொள்ள வேண்டும் என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.