சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது


சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 Feb 2018 5:23 AM IST (Updated: 26 Feb 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்-மந்திரி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

மும்பை,

மராட்டியத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வரும் 9-ந் தேதி நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்தநிலையில் சட்டசபை கூட்டம் தொடங்கும் முன்பு வழக்கமாக நடத்தப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதை எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். கடந்த சில நாட்களாகவே கூட்டத்தொடரில் எழுப்பவேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமளிக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

பீமா- கோரேகாவ் கலவரம், மும்பை கேளிக்கை விடுதி தீ விபத்து சம்பவம், தலைமை செயலக தற்கொலை சம்பவங்கள், பூச்சிக்கொல்லி மருந்தால் விவசாயிகள் உயிரிழப்பு, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏற்பட்ட தொய்வு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மும்பையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு என இந்த கூட்டத்தொடரை அமைதி இழக்க செய்ய பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும் நேற்று நிருபர்களை சந்தித்து மேற்கண்ட பிரச்சினைகள் கண்டிப்பாக சட்டசபையில் எழுப்பப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதும், சிவசேனா எதிர்க்கட்சி போல் வரிந்துகட்டி நிற்பதும் ஆளும் பா.ஜனதா தலைமையிலான அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாகும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை பா.ஜனதா தலைமையிலான அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story