விவசாய கடன் தள்ளுபடி குறித்து மோடி வாய் திறக்காதது ஏன் சித்தராமையா கேள்வி


விவசாய கடன் தள்ளுபடி குறித்து மோடி வாய் திறக்காதது ஏன் சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 26 Feb 2018 12:13 AM GMT (Updated: 26 Feb 2018 12:13 AM GMT)

சிக்கபடலகியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகல்கோட்டை,

விவசாய கடன் தள்ளுபடி குறித்து மோடி வாய் திறக்காதது ஏன்? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். பாகல்கோட்டை மாவட்டம் சிக்கபடலகியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. விஜய் மல்லையா, நிரவ்மோடி, லலித்மோடி ஆகியோர் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர். இதற்கு மோடியின் ஆதரவு உண்டு. அவருடைய உதவி இல்லாமல் மோசடி செய்தவர்கள் தப்பி செல்ல முடியாது.

சிறுபான்மையினர், பெண்கள், தலித் மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி மோடி வாய் திறப்பது இல்லை. ஆனால் அவர் பேசும்போதெல்லாம் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’(இது ஒரு இந்தி வார்த்தை, இதற்கு தமிழில் ‘அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என பொருள்) என்று முழங்குகிறார். அடித்தட்டு மக்களை விட்டுவிட்டு வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா?. இவ்வளவு பொய் பேசும் பிரதமரை நான் எங்கும் பார்த்தது இல்லை.

ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தவர்களை அருகில் அமர வைத்துக்கொண்டு எங்கள் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை மோடி கூறுகிறார். விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதுபற்றி மோடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?. இப்போது விவசாயிகளின் நலன் பற்றி அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு அவர், எங்களிடம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் இல்லை என்றும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார். விவசாய கடனை தள்ளுபடி செய்ய மோடியும் முன்வரவில்லை. இத்தகைய விவசாயிகளின் விரோதிகள் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா?.

பா.ஜனதா வெற்றி பெற்றால் எடியூரப்பாதான் முதல்-மந்திரி என்று மோடி சொல்கிறார். ஊழல் செய்துவிட்டு சிறைக்கு சென்றவர்களுக்கு நீங்கள் ஓட்டு போடுகிறீர்களா?. இத்தகையவர்கள் மீண்டும் மாநிலத்தின் முதல்-மந்திரி ஆக வேண்டுமா?. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இலவச சைக்கிள், சேலை கொடுத்ததாக எடியூரப்பா சொல்கிறார். அதற்கடுத்து சிறைக்கு சென்று வந்ததையும் அவர் சொல்ல வேண்டும்.

சிறைக்கு சென்று வந்ததை நாங்கள் சொன்னால், எடியூரப்பா பேய் வந்ததை போல் ஆடுகிறார். நான் தவறான தகவல் எதையும் கூறவில்லை. சிறைக்கு சென்று வந்ததை கூறுவது தவறா?. நாங்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். அன்ன பாக்ய, ஷீர பாக்ய, வித்யாஸ்ரீ, பசு பாக்ய, கிருஷி பாக்ய உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story