விறகு குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்


விறகு குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:15 PM GMT (Updated: 26 Feb 2018 5:25 PM GMT)

அஞ்சுகிராமம் அருகே விறகு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரத்தடிகள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கன்னியாகுமரி,

அஞ்சுகிராமம் அருகே சங்கனாபுரத்தில் முத்து என்பவர் விறகு குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில்  ஏராளமான விறகுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும், விலை உயர்ந்த மரத்தடிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில் திடீரென இந்த விறகு குடோனில் தீ பிடித்துக்கொண்டது.

அப்போது, காற்று பலமாக வீசியதால் தீ ‘மள.. மள..வென’ விறகுகளில் பரவியது. மேலும், மரத்தடிகளிலும் தீ பிடித்துக்கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்குள் வரவில்லை.

இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மரத்தடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது. விறகுகள் நன்கு காய்ந்து இருந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இறுதியில் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரத்தடிகளும், விறகுகளும் எரிந்து நாசமாகி உள்ளது.


Next Story