வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை, சென்னையை சேர்ந்த அண்ணன்-தம்பி கைது


வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை, சென்னையை சேர்ந்த அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 26 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்ததாக சென்னையை சேர்ந்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ்காரர் கோவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், சிக்னலில் உள்ள கோட்டை தாண்டி நின்றதாக தெரிகிறது. இதைகண்ட சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினார்.

அதில், அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், அந்த வாலிபர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜை தகாத வார்த்தையால் பேசியதுடன், அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள், அங்கிருந்த போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்ததுடன், பின்னால் வந்த வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விடுவதாக ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப் படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், சென்னை சூளைமேட்டை சேர்ந்த செல்வக்குமார்(வயது 29) மற்றும் அவருடைய தம்பி செந்தில்குமார்(28) என்பது தெரிந்தது.

இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து அண்ணன்- தம்பிகளான செல்வக்குமார், செந்தில்குமார் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். 

Next Story