திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:15 AM IST (Updated: 26 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தவறான முறையில் பட்டா மாற்றம் செய்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டையை அடுத்த அக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அக்கரம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங் களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் ஊத்துக்கோட்டையை அடுத்த அக்கரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் 7.88 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. அதனை எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் முறையற்ற வகையில் சிட்டா அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்து தவறான முறையில் பட்டா மாற்றம் செய்துள்ளனர்.

ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் 5 ஏக்கர் நிலத்தை 2 நபர்கள் பத்திரப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தவறான முறையில் பட்டா மாற்றம் செய்து பத்திரப்பதிவும் செய்து உள்ளனர்.

இதை அறிந்த நாங்கள் தவறான முறையில் பட்டா மாற்றம் செய்து அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அக்கரம்பாக்கம் ஊராட்சியில் தவறான முறையில் பட்டா மாற்றம், பத்திரப்பதிவு செய்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறான முறையில் வழங்கப்பட்ட பட்டா மற்றும் பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story