பின்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி


பின்பக்க டயர் வெடித்ததால் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 27 Feb 2018 3:15 AM IST (Updated: 26 Feb 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைக்கு காது குத்தும் விழாவுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்த போது தாறுமாறாக ஓடிய வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கீழுர் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவருடைய குழந்தைக்கு, கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள மேகாத்தம்மன் கோவிலில் வைத்து காது குத்தும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கீழுர் பகுதியை சேர்ந்த கதிரவனின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என 15 பேர் ஒரு வேனில் கடலூர் கிராமத்துக்கு வந்தனர்.

காது குத்து விழாவில் கலந்துகொண்ட பிறகு அனைவரும் மீண்டும் அதே வேனில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் யோகேஸ்வரன் என்பவர் ஓட்டினார். கல்பாக்கம் அடுத்த குன்னத்தூர் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் சேதம் அடைந்தது.

இதில் வேனில் இருந்த டிரைவர் யோகஸ்வரன் உள்பட 15 பேரும் காயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கவிழ்ந்து கிடந்த வேனில் சிக்கிய அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேகாத்தம்மாள் (வயது 80) என்ற மூதாட்டி மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story