காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது
x
தினத்தந்தி 27 Feb 2018 4:45 AM IST (Updated: 26 Feb 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதற்காக கொண்டாடினர் என்று தெரியவில்லை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது என்று தேவே கவுடா வலியுறுத்தினார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினையின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்தபோது அதுபற்றி நான் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. தீர்ப்பை முழுமையாக படித்து பார்த்த பிறகு கருத்து தெரிவிப்பேன் என்று சொன்னேன். இந்த தீர்ப்பு வந்தபோது சட்டசபையில் அனைத்துக்கட்சிகளும் பேதங்களை மறந்து வரவேற்று இனிப்பு வழங்கி மகிழ்ந்தன.

நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டத்திற்கு பலன் கிடைத்ததாக அனைவரும் கூறினர். இந்த தீர்ப்பில் கர்நாடகத்திற்கு என்ன நன்மை கிடைத்துள்ளது, எதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்று தெரியவில்லை. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் கர்நாடகத்திற்கு உரிய நியாயம் கிடைக்காததால் அந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது மூத்த வக்கீல் நாரிமனை நேரில் சந்தித்து நான் இதுபற்றி பேசினேன். அப்போது அவர் கோபம் அடைந்தார். ஆயினும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் முடிவை அவரை ஏற்க வைத்தேன். மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தலைவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தான் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தோம்.

காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய 2 தேசிய கட்சிகளை நம்பி மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். எனக்கு ஆட்சி அதிகார ஆசை இல்லை. எனக்கு வயதாகிவிட்டது. எனது மக்களுக்காக நானே போராடிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தமிழ்நாட்டில் மேல்முறையீடு செய்ய அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

ஆட்சேபனைகளை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அந்த வாரியம் அமைக்கப்பட்டால், கர்நாடகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் பணியை மாநில அரசு செய்யவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு அலட்சியமாக இருப்பது சரியல்ல.

நமது சட்ட நிபுணர்களுடன் மாநில அரசு இன்னும் விவாதிக்கவில்லை. பாராளுமன்றத்தில் நான் தனியாக போராடுகிறேன். ஒத்துழைக்கும்படி அனந்தகுமாரிடம் கூறினேன். அரசியல் லாபத்திற்காக என்ன வேண்டுமானாலும் நடைபெறும் நிலை உள்ளது. எனக்கு பிறகும் காவிரி படுகையில் உள்ள மக்கள் வாழ வேண்டும். அடுத்த தலைமுறையினரும் கஷ்டம் இல்லாமல் உணவு உண்ண வேண்டும்.

கிருஷ்ணராஜ சாகர் அணையை விசுவேஸ்வரய்யா கட்டினார். அதற்கு நமது மாநிலத்தினர் என்னவெல்லாம் எழுதி கொடுத்துள்ளனர். பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தலாம் என்று அனந்தகுமாரிடம் கூறினேன். கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி சொல்வதாக கூறினார். ஆனால் அவர் எதையும் கூறவில்லை. குடிநீர் வராமல் நின்றால் தான் பெங்களூரு நகர மக்களுக்கு உண்மை நிலை தெரியவரும். அப்போது என்னை நினைத்துக் கொள்வார்கள். இவ்வாறு பேசுவதால் என்னை விரோதி என்று சொல்வார்கள்.

தீர்ப்பில் நதியை திருப்பி விடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. பிறகு எப்படி தண்ணீரை மக்களுக்கு கொடுப்பீர்கள்?. 2 தேசிய கட்சிகளும் பாசன பரப்பை அதிகரிக்க ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாடு முதலில் தங்களின் பயிர்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டது. அதற்கு நமது வக்கீல், எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை, பாசனத்திற்கு எப்படி தண்ணீர் தர முடியும்? என்று கோர்ட்டில் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகத்திற்கு பிரச்சினை தான். நமது மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை. நமக்கு கூடுதலாக 40 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் 14.75 டி.எம்.சி. தான் நமக்கு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கவே கூடாது. இதுபற்றி மத்திய மந்திரி அனந்தகுமாருடன் நான் ஆலோசனை நடத்தினேன். இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு என்ன?.இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story