பிரதமர் மோடி இன்று தாவணகெரே வருகை


பிரதமர் மோடி இன்று தாவணகெரே வருகை
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி இன்று(செவ்வாய்க்கிழமை) தாவணகெரே வருகிறார். பா.ஜனதா விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசு கிறார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஏற்கனவே கர்நாடகத்தில் குறிப்பாக ஐதராபாத்-கர்நாடக பகுதியில் பயணம் செய்து கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

அதே போல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 24-ந் தேதி மும்பை-கர்நாடக பகுதியில் பயணத்தை தொடங்கி நேற்று உப்பள்ளி-தார்வாரில் நிறைவு செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று(செவ்வாய்க்கிழமை) கர்நாடக மாநிலம் தாவணகெரேவுக்கு வருகிறார். அங்கு அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த மாநாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து விவசாயிகளை மாநாட்டுக்கு அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்துள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு ஷோபா எம்.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தாவணகெரேயில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒருவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லவும் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தாவணகெரேயில் எங்கு பார்த்தாலும் பா.ஜனதா கொடி பறக்கிறது. பிரதமர் வருகையையொட்டி தாவணகெரேயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு படையினர் முன்கூட்டியே தாவணகெரேவுக்கு வந்து மாநாடு நடைபெறும் மைதானத்தில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story