சேதப்படுத்தப்பட்ட வலைகளுடன் மீன்துறை அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை


சேதப்படுத்தப்பட்ட வலைகளுடன் மீன்துறை அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 27 Feb 2018 4:00 AM IST (Updated: 27 Feb 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி பகுதியில் சேதப்படுத்தப்பட்ட வலைகளுடன் கரையோர மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்,

ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தரையர்நகர் மற்றும் ஏராந்துறை பகுதியை சேர்ந்த ஏராளமான நாட்டுப்படகு-பாரம்பரிய மீனவர்கள் நேற்று காலை மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் சேதமடைந்த வலைகளுடன் மீனவர்கள், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள், மீன்துறை உயர் அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் வழக்கம்போல் கடந்த 25-ந் தேதி நாட்டுப்படகு, வல்லங்களில் சென்று மீன்பிடி வலைகளை கடலில் போட்டுவிட்டு திரும்பி வந்தோம். மறுநாள் சென்று மீன்பிடி வலைகளையும், அதில் சிக்கியிருக்கும் மீன்களையும் எடுத்து வருவதற்காக சென்று பார்த்தபோது மண்டபம், கீழக்கரை பகுதிகளை சேர்ந்த விசைப்படகுகள் மீன்பிடி சட்டத்தை மீறி ஒரு கடல்மைல் தொலைவிற்குள் வந்து எங்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

மேலும், 11 மீனவர்களுக்கு சொந்தமான 44 மீன்பிடி வலைகளை அறுத்து எடுத்து சென்றுவிட்டனர். இதனால் நாங்கள் தொடர்ந்து மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து விசைப்படகு மீனவர்கள் எடுத்து சென்ற மீன்பிடி வலைகளை திருப்பி பெற்றுத்தர வேண்டும், சேதமடைந்த வலைகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் விசைப்படகு மீனவர்கள் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

Next Story