தர்மபுரியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
தர்மபுரியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
தர்மபுரி,
கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள்(வயது 45). இவருடைய உறவினர் வீட்டு திருமணம் தர்மபுரி அன்னசாகரத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவிந்தம்மாள் தர்மபுரிக்கு வந்தார். அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அன்னசாகரத்தில் இருந்து தர்மபுரி பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மநபர் கண் இமைக்கும் நேரத்தில் கோவிந்தம்மாளின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இருப்பினும் அந்த மர்ம நபர் நகையுடன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த நகையின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து கோவிந்தம்மாள், தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.