பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பது போல் ஆண்களுக்கு ஆட்டோ கேட்டு மின் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்


பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பது போல் ஆண்களுக்கு ஆட்டோ கேட்டு மின் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:45 AM IST (Updated: 27 Feb 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பதுபோல் ஆண்களுக்கு ஆட்டோ கொடுங்கள் என்று கேட்டு குடிபோதையில் மின் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் போராடி மீட்டனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள தண்டிராதேவிபட்டினத்தை சேர்ந்தவர் காட்டுராஜா மகன் முருகன் (வயது 34). டிரைவரான இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதால் வேலையில்லாமல் சுற்றித்திரிந்துள்ளார். மேலும் மனஉளைச்சல் ஏற்பட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் மது அருந்திய அவர் போதை தலைக்கேறியதும் காக்காதோப்பு பகுதியில் உள்ள சுமார் 60 அடி உயரமுள்ள 110 மெகாவாட் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறினார். சிறிது தூரம் அவர் ஏறியதுமே இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து அந்த மின் கோபுரம் வழியாக தூத்துக்குடியில் இருந்து காரைக்குடி செல்லும் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. ஆனால் அந்த இளைஞர் எதையும் கண்டு கொள்ளாமல் மின் கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு சதீஷ்குமார், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் 108 ஆம்புலன்சு வாகனம் வரவழைக்கப்பட்டது.

மின் கோபுரத்தில் இருந்து முருகனை போலீசார் இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து உன் கோரிக்கை என்ன? என்று போலீசார் மைக் மூலம் கேட்டனர். அதற்கு அவர் பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பதுபோல் ஆண்களுக்கு ஆட்டோ கொடுங்கள், பிழைப்பு இல்லை, சொந்தமாக புதிய ஆட்டோ வேண்டும் என்று தெரிவித்தார். உடனே புதிதாக இருந்த வாடகை ஆட்டோவை வரவழைத்து, இதோ ஆட்டோ வந்து விட்டது. கீழே இறங்கி வா என்று அழைத்தனர். ஆட்டோவை பார்த்த முருகன், நம்பர் இல்லாத புதிய ஆட்டோ எனது பெயரில் வாங்கித்தாருங்கள். இல்லையென்றால் இறங்கமாட்டேன். கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். மேலும் கோபுரத்தின் உச்சியில் படுத்துக்கொண்டும், கம்பியை பிடித்து தொங்கியும் கீழே விழுவதாக பயமுறுத்தினார்.

உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு சதீஷ்குமார் தீயணைப்பு வீரர்கள் 3 பேரை கோபுரத்தின் மீது ஏறி முருகனை மீட்குமாறு கூறினார். இதையடுத்து 3 பேர் கோபுரத்தில் ஏறிச்சென்றனர். அவர்கள் மேலே வருவதைக்கண்ட வாலிபர் முருகன் நான் கீழே குதித்து விடுவேன், இறங்குங்கள் என்று கூறி குதிப்பது போல் பாசாங்கு செய்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் பாதியில் நின்று விட்டனர். பின்னர் முருகனின் தாயார், தங்கை, மற்றும் தங்கையின் குழந்தைகளை அழைத்து வந்து அவரிடம் பேச வைத்தனர். அவர்களும் இறங்கி வா, இறங்கி வா என்று கூச்சலிட்டனர்.

அப்போது முருகன் பெண்களுக்கு மட்டும் அம்மா ஸ்கூட்டர் கொடுக்கிறார்கள். எங்களுக்கு இலவச ஆட்டோ தரக்கூடாதா? என்று கேட்டார். உடனே போலீசார் உனக்கு ஆட்டோ சொந்தமாக வாங்கித்தருகிறோம். கீழே இறங்கி வா என்று அழைத்தனர். அதைத்தொடர்ந்து கோபுரத்தின் உச்சிக்கு சென்ற தீயணைப்பு வீரர் நைசாக பேசி முருகனை பிடித்தார். பின்பு அவரது இடுப்பில் கயிற்றால் கட்டி மாலை 4 மணி அளவில் மீட்டு கீழே அழைத்து வந்தனர்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருந்தது. முருகன் கீழே இறங்கி வந்ததும் போலீசார் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து அந்த உயர் அழுத்த மின் கோபுரம் வழியாக காரைக்குடி மின் சப்ளை செய்யப்பட்டது. 

Next Story