குமிழங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவதை தடுக்க வேண்டும், கலெக்டரிடம் முறையீடு


குமிழங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவதை தடுக்க வேண்டும், கலெக்டரிடம் முறையீடு
x
தினத்தந்தி 27 Feb 2018 3:45 AM IST (Updated: 27 Feb 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி தாலுகாவில் உள்ள குமிழங்குளம் கண்மாயில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

சிவகாசி அருகிலுள்ள கிருஷ்ணமநாயக்கன்பட்டி, செவலூர், லட்சுமியாபுரம், குமிழங்குளம் ஆகிய கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகாசி தாலுகாவில் உள்ள எரிச்சநத்தம் அருகே குமிழங்குளம் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பில் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் கிழக்கு பக்கமும், வடமேற்கு மற்றும் மேற்கிலும் உபரி நீர் செல்ல 2 கலுங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கலுங்குகள் வழியாகத்தான் உபரிநீர் வெளியேறும். ஏற்கனவே இந்த கலுங்குகளை சாலை அமைப்பதற்காக ஜில்லாபோர்டு மூலம் கையகப்படுத்தி சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள இடம் கண்மாயில் இருந்து உபரிநீர் மற்றும் வெள்ளநீர் வெளியேறும் கால்வாயாக காலம்காலமாக இருந்து வருகிறது. தற்போது தனிநபர் 6 சென்ட் நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று கண்மாய் நீர் வெளியேறும் கால்வாய்களை முற்றிலுமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுகிறது.

இதனால் வரத்து கால்வாயில் கண்மாய் நீர் செல்லாமல் சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கண்மாயில் உபரி நீர் வெளியேறாமல் தேக்கநிலை அடைந்தால் கண்மாய் உடைந்து உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படும். எனவே கண்மாயை நேரடியாக பார்வையிட்டு தனி நபர் வைத்துள்ள முறைகேடான ஆவணங்களை ரத்து செய்வதுடன் கட்டுமான பணியை உடனடியாக நிறுத்தி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story