இலவச மனைப்பட்டா வழங்க கோரி வருவாய் துறை அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை


இலவச மனைப்பட்டா வழங்க கோரி வருவாய் துறை அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 27 Feb 2018 3:45 AM IST (Updated: 27 Feb 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி திருபுவனையில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

மதகடிப்பட்டு பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அங்குள்ள ஊறல் குட்டை அருகே இடம் ஒதுக்கப்பட்டது. இதில் 26 குடும்பங்களுக்கு மட்டுமே இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதைதொடர்ந்து அனைத்து குடும்பத்தினருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என நரிக்குறவர்கள் வலியுறுத்தி வந்தனர். கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறையினரிடம் பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நரிக்குறவர்கள் குடும்பத்தினர் நேற்று தங்களது ஆதார், ரேஷன். வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க மதகடிப்பட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அலுவலகம் நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்ததால் அங்கிருந்து திருபுவனையில் உள்ள வருவாய்துறை அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது திடீரென நரிக்குறவர்கள் சிலர் தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணை கேனை திறந்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர். நீண்டநேர வாக்குவாதத்திற்கு பின்னர் நரிக்குறவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story