மரணப்பள்ளமாக காட்சி அளிக்கும் கழிவுநீர் வாய்க்காலை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு


மரணப்பள்ளமாக காட்சி அளிக்கும் கழிவுநீர் வாய்க்காலை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:00 AM IST (Updated: 27 Feb 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மரணப்பள்ளமாக காட்சி அளிக்கும் கழிவுநீர் வாய்க்காலை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நகரின் மையப்பகுதியில் பழைய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், மருத்துவகல்லூரி, வல்லம், அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், நீடாமங்கலம், ஒரத்தநாடு, நாஞ்சிக்கோட்டை, பாபநாசம், அரியலூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், ஜவுளி எடுப்பதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும், நகைகள் எடுப்பதற்கும், தனியார், அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கும் தஞ்சைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் ஆயிரக்கணக்கானோர் தஞ்சைக்கு வந்து செல்கின்றனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் கிராமங்களின் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு தான் வர வேண்டியது உள்ளது. அங்கிருந்து தான் பிற இடங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டும். இதனால் அதிகாலை முதல் இரவு வரை எப்போதும் பழைய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

பழைய பஸ் நிலையத்தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்புள்ள போலீஸ் உதவி மையத்தில் அகன்ற டி.வி. மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த உதவி மையத்திற்கு பின்புறம் ஆழமான, சதுர வடிவிலான கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பெரிய அளவிலான கற்களை கொண்டு மூடப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கற்கள் அகற்றப்பட்டு திறந்தவெளியாகவே வாய்க்கால் காணப்படுகிறது. அந்த வாய்க்காலில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் எல்லாம் கிடக்கிறது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகின்றன.

மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் மழை காலங்களில் பழைய பஸ் நிலையம் முன்பு கழிவுநீரும், மழைநீருடன் கலந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் யாராவது அந்த பகுதியில் நடந்து சென்றால் வாய்க்காலுக்குள் விழ வேண்டும். இந்த வாய்க்காலின் ஒரு புறம் இரும்பு கம்பியால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு புறம் உதவி மையத்தின் சுவர் உள்ளது. மற்ற 2 புறமும் திறந்தவெளியாகவே காணப்படுகிறது. சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன், மரணப்பள்ளம் போல் காட்சி அளிக்கும் இந்த வாய்க்காலை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய பஸ் நிலையத்தில் இருந்து விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு செல்லும் பாதையானது இரவு நேரத்தில் இருட்டாக காணப்படும். அங்கு மின்விளக்குகள் எதுவும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியானது திறந்தவெளி மதுக்கூடமாக காட்சி அளிக்கிறது. ஏற்கனவே மதுக்கடையை ஒட்டியுள்ள பார்கள் இயங்காததால் பெரும்பாலானோர் மதுக்கடைகளில் இருந்து மதுப்பாட்டில்களை வாங்கி வந்து இருள்சூழ்ந்த பகுதியில் நின்று மோட்டார் சைக்கிள்களில் அமர்ந்தபடியும், தரையில் அமர்ந்தபடியும் மது அருந்துகின்றனர். இந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தினர் தரமான குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாகும். 

Next Story