பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 42 பேர் கைது


பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 42 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்ககோரி திருவோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 42 பேரை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்

ஒரத்தநாடு,

2016-17-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட திருவோணம் பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. எனவே விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். திருவோணம் பகுதியில் சம்பா சாகுபடி செய்து போதிய அளவிற்கு பாசன நீர் கிடைக்காததால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகி சேதம் அடைந்து விட்டது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று திருவோணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேலு தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க செயலாளர் சின்னத்துரை உள்ளிட்ட விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமம் போட்டும், கறுப்பு பேட்ஜ் அணிவித்தும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டவாறு வட்டார வேளாண்மை மையத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர்.

இவர்களை அலுவலக முகப்பு கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகளை கைது செய்யுமாறு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட போலீசார், விவசாயிகள் 42 பேரையும் கைது செய்து அவர்களை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட விவசாயிகள் 42 பேருக்கும் போலீசார் மதிய உணவு வழங்கினர். ஆனால் விவசாயிகள் அந்த உணவை வாங்கி சாப்பிடவில்லை. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை உடனே வழங்க வேண்டும் இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உயர் அதிகாரிகள் நேரில் வரவேண்டும் எனக்கூறி விவசாயிகள் சாப்பிடாமலேயே திருமண மண்டபத்தில் அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ், திருவோணம் வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர்(பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றி தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த விவசாயிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story