சென்னை-குமரி சாலைக்கு இணையாக கிழக்கு கடற்கரை சாலை மாற்றப்படும்


சென்னை-குமரி சாலைக்கு இணையாக கிழக்கு கடற்கரை சாலை மாற்றப்படும்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை-குமரி சாலைக்கு இணையாக கிழக்கு கடற்கரை சாலை மாற்றப்படும், என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு வாகனம் நிறுத்தும் முனையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வ.உ.சி. துறைமுகம் வளர்ச்சியில் இந்த சரக்கு வாகனம் நிறுத்தும் முனையம் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவில் உள்ள 12 பெருந்துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. 4-வது துறைமுகம் கன்னியாகுமரியில் அமைய உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் புதிய கிரேன்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கிரேன்கள் ஒரு மணி நேரத்தில் 30 சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டவை ஆகும். இதனால் அதிகப்படியான சரக்கு பெட்டகங்களை கையாள முடியும்.

துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிக்கும் பணி ரூ.3 ஆயிரம் கோடியில் நடந்து வருகிறது. இந்த பணி முடிவடையும் போது, பெரிய கப்பல்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. பிரதமரும், மத்திய மந்திரி நிதின் கட்காரியும், துறைமுகம் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செய்து வருகின்றனர்.

மேலும் சென்னை- திருச்சி-மதுரை-கன்னியாகுமரி சாலைக்கு இணையாக சென்னை-புதுச்சேரி-தூத்துக்குடி-கன்னியாகுமரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையை மாற்றி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. காவிரியில் தண்ணீர் குறைந்து உள்ளதால், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் தென்கோடியில் அமைந்து உள்ளது. இதன் வசதிகளை பெருக்குவதால், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகம் அதிக சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த துறைமுகம் மென்மேலும் வளருவதால் நாட்டின் வருமானத்தை பெருக்க முடியும். சட்டம், வாதம், தீர்ப்பு எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நதிநீர் உரிமைகளை நடுநிலையோடு மத்திய மந்திரி தமிழகத்துக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story