தன்னம்பிக்கை இருந்தால் சாதனை படைக்கலாம் மின்சாதன பொருட்களின் பழுதை நீக்கும் பார்வையற்ற வாலிபர்


தன்னம்பிக்கை இருந்தால் சாதனை படைக்கலாம் மின்சாதன பொருட்களின் பழுதை நீக்கும் பார்வையற்ற வாலிபர்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:15 AM IST (Updated: 27 Feb 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

தன்னம்பிக்கை இருந்தால் சாதனை படைக்கலாம் என்பதற்கு உதாரணமாக கண் பார்வையற்ற வாலிபர் மின்சாதன பொருட்களின் பழுதை நீக்கி சரிசெய்து தருகிறார்.

வெள்ளியணை,

மாற்றுத்திறனாளிகளாக பிறந்தவர்கள் அதை நினைத்து மூலையில் முடங்கி கிடக்காமல் மனதளவில் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டு தன்னுள் மறைந்திருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்தும்போது சாதனையாளர்களாக மாறி வெளியுலக வெளிச்சத்திற்கு வந்து பாராட்டை பெறுகிறார்கள். அந்த வகையில் கண்பார்வை கொண்டவர்களே மிகவும் நுணுக்கமாக பார்த்து மின்சாரத்தை கவனமாக கையாண்டு மின்சாதன பொருட்களை பழுது நீக்க தடுமாறும் போது, 2 கண்பார்வையும் இல்லாமல் மின்னணு சாதனங்களை பழுது நீக்கி வியப்பில் ஆழ்த்துகிறார் பார்வையற்ற வாலிபர் ஒருவர்.

கரூர் மாவட்டம், ஏமூர், நடுப்பாளையம் மாரியம்மன் நகரை சேர்ந்த 31 வயது இளைஞர் பாலசுப்பிரமணி தான் அந்த விந்தை மனிதர். பாலசுப்பிரமணியனும், அவரின் 35 வயதுடைய அண்ணன் நல்லுசாமியும் பிறக்கும்போதே கண்பார்வை இழந்தவர்கள். இவர்கள் இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே தந்தை முத்துசாமி இறந்துவிட்டார். தாயார் விஜயா கூலி வேலை செய்து கரூரில் உள்ள சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளியில் அவர்களை படிக்க வைத்துள்ளார்.

இதில் அண்ணன் நல்லுசாமி 10-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொள்ள, தம்பி பாலசுப்பிரமணி மட்டும் தொடர்ந்து படித்து 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

பொதுவாக கண் பார்வை இழந்தவர்கள் மேற்படிப்பு படிக்க விரும்பும் போது அவர்களின் தேர்வாக இருப்பது ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களாக பணிபுரிவதாகத்தான் இருக்கும். ஆனால் இளம் வயது முதலே மின்னணு சாதனங்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்த பாலசுப்பிரமணியன் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.வி.எச். தொழிற் பயிற்சி நிலையம் சென்று பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ற டிப்ளமோ படிப்பை படித்தார்.

பின்னர் அங்கு கற்றுக்கொண்ட மின்னணு சாதனங்களின் செயல்பாடு குறித்த அறிவுடன் தனது சொந்த முயற்சியால் தற்போது டி.வி., டி.வி.டி, ஹோம்தியேட்டர், ஆம்ப்ளிபயர், மிக்சி, கிரைண்டர் போன்ற மின்னணு சாதனங்களின் பழுதை நீக்கி சரியாக இயங்க வைப்பதில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து தற்போது இவர் தனது வீட்டிலேயே எலக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்கும் தொழிலை செய்து வருகிறார்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறும்போது, “டி.வி. போன்ற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் கெபாசிட்டர், ஐ.சி., சிக்னல் போன்றவைகளின் செயல்பாடுகளை ஓம்ஸ், வாட்ஸ் போன்ற அளவீடுகளின் மூலம் மல்டி மீட்டர் கொண்டு அறிய வேண்டி உள்ளது. ஆனால் கண்பார்வை இழந்த என்னால் அதன் அளவீடுகளை பார்த்து அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் அளவீடுகளை சோதனை செய்யும் கருவியில் சில சிக்னல் ஒலி ஏற்படும் வகையில் மாற்று ஏற்பாடு செய்து தற்போது பழுது நீக்கி வருகிறேன். இதற்கு தீர்வாக அரசிடம் நான் எதிர்பார்ப்பது ஆடியோ மல்டி மீட்டர் உள்பட பல நவீன சாதனங்கள் வாங்கி தனியாக கடை வைக்க நிதியுதவி, இல்லையேல் என்னுடைய படிப்பிற்கு உகந்ததுறையில் அரசின் வேலை வாய்ப்பு வேண்டும் என்பது தான்” என்றார்.

மிகவும் சிக்கலாகவும், நெருக்கமாகவும், சிறியதாகவும் உள்ள பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் மின் சாதனங்களை கண்பார்வை இல்லாமல் தனது திறமையால் கண்டறிந்து, மின் இணைப்பு தவறாக தரப்பட்டால் தனக்கே ஆபத்தாக அமையும் என்பதையும் பொருட்படுத்தாமல் இச்செயலில் துணிந்து ஈடுபட்டு வரும் பாலசுப்பிரமணியனின் பணி பாராட்டுக்குரியது. இதை அறிந்து அரசு அவருக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும் என்பதே அவரை அறிந்தவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story