புதிய பாடத்திட்டத்தை கற்பிக்க 500 ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்படும்


புதிய பாடத்திட்டத்தை கற்பிக்க 500 ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்படும்
x
தினத்தந்தி 27 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாடத்திட்டத்தை கற்பிப்பதற்கு ஏதுவாக 500 ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்படும் என்று புஞ்சைபுளியம்பட்டியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் காராப்பாடியில் இருந்து பாறைப்புதூர் வரை ரூ.1 கோடியே 72 லட்சம் செலவில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சந்தேகங்களை போக்கிட உள்ளிட்ட எந்தவொரு கேள்விகளுக்கும் 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில் 14417 என்ற ஹெல்ப்லைன் வசதி விரைவில் தொடங்கப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்கவும் ‘சிநேகா’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களின் வீட்டிற்கே சென்று கவுன்சிலிங் அளிக்கப்படும்.

புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக முதல்கட்டமாக 500 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு முடிந்தவுடன் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை தயார்நிலையில் உள்ளது. கோடை காலம் தொடங்குவதால் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதைத்தொடர்ந்து காவிலிபாளையத்தில் ரூ.24 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணியையும், மாரம்பாளையம் மற்றும் வடுகபாளையத்தில் தலா ரூ.17 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் பவானிசாகர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story